அரும்பாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் கழிவறை வசதியில்லாததால் பெண் ஊழியர்கள் தவிப்பு

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு கழிவறை இல்லாததால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சென்னை அரும்பாக்கம், 105வது வார்டில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 50 பெண் ஊழியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ேடார் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அலுவலகத்தில் ஒரேயொரு கழிவறை மட்டுமே உள்ளது. இதை அதிகாரிகள் உள்பட ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிவறைக்குள் பெண்கள் செல்வதற்கு தர்மசங்கடம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் நாள்தோறும் பெண் ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், இந்த கழிவறையின் கதவுகள், குடிநீர் குழாய்கள் உடைந்து கிடக்கிறது. எனவே, பெண் ஊழியர்களுக்கென தனியே கழிவறை கட்டி தரும்படி மண்டல, வார்டு அதிகாரிகளிடம் பலமுறை பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

பொது இடங்களில் போதிய கழிவறையின்றி மகளிர் தவித்து வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்திலேயே பெண் ஊழியர்களுக்கு கழிவறை இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது.  எனவே, பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த வார்டு அலுவலகத்தில் பெண்களுக்கென்று தனியே ஒரு கழிவறை கட்டித்தர மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: