500 சவரன் கொடுத்தும் சொத்து கேட்டு மிரட்டல்: இளம் ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்

சென்னை: தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்த இளம் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி அருணா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான், கடந்த 2017ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கும்போது, இருவீட்டு சம்மதத்துடன் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, எனது வீட்டில் 500 சவரன் தங்க நகை, சொகுசு கார், இதுதவிர எனது கணவருக்கு 3 லட்சத்தில் வாட்ச் என 4 கோடி சீர்வரிசை செய்யப்பட்டது.  திருமணம் நடந்து 10 மாதம் நான் அவருடன் வசித்து வந்ததேன். அப்போது என்னை திட்டி கேவலப்படுத்தினார். அவரது தாய் மலர்கொடியுடன் சேர்ந்து என்னை கொடுமை செய்தார். பிறகு எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி தற்போது குடும்ப நல நீதிமன்றதில் வழக்கு நடந்து வருகிறது.

நான், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்க பல வழிகளில் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வருகிறார். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை அவர் கூறி வருகிறார். அதோடு இல்லாமல் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு, அதற்காக என்னை விவாகரத்து செய்ய நினைக்கிறார். இதுகுறித்து எனது தந்தை பேசினால் மகள் மீது சொத்தை எழுதி தர வலியுறுத்துகிறார். திருமணத்தின் போது அவரது உறவினர் மூலம் எனது தந்தையிடம் ₹1 கோடி ரொக்கம் வரதட்சணையாக கேட்டனர். 4 கோடி வரதட்சணையாக கொடுத்தும் மீண்டும் மீண்டும் விவாகரத்துக்காக மிரட்டி வருகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது கணவர் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யலாமல் காலம் தாழ்த்தினர்.

 பிறகு நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, எனது புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்ய உத்தரவு பெற்றேன். அப்படி இருந்தும் எனது கணவர் மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்யலாமல் இழுத்து அடித்து வருகிறது. எனவே, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் அருணா கூறியுள்ளார்.

Related Stories: