×

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 23 மாகாணங்களில் நோய் தொற்று பரவி உள்ள நிலையில், வைரஸ் பரவாமல் தடுக்க மேலும் 10 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் சார்ஸ் வகையைச் சேர்ந்த புதிய கொரோனோ வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. வுகான் நகரில் நோய் தொற்றுடைய இறைச்சி மூலமாக மனிதனுக்கு பரவியதாக மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தற்போது வேகமாக பரவி வருகிறது. சளி மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரை பறிக்கும் இந்நோய்க்கு நேற்று முன்தினம் 17 பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 23 மாகாணங்களில் வைரஸ் பரவி இருப்பதாகவும், வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் 1,072 பேரிடம் பரிசோதனை நடந்து வருவதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 830 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹூபெய் மாகாணத்தில் தான் அதிக பாதிப்புகள் உள்ளன. இறந்த 25 பேரில் 24 பேர் மத்திய ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இன்னொருவர் அம்மாகாணத்தின் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இதனால், ஹூபேய் மாகாணத்தின் வுகான், ஹுயாங்காங்க், எதோவ் நகரங்களுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் சிபி, ஜியான்டோவ், குயன்ஜியாங், ஜிஜியாங்க் மற்றும் லிசியாங்க் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 4.1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரங்களில் பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நோய் பரவுவதை தடுக்க தேவையான மருத்துவ வசதிகளை செய்ய ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சீன நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்கள் விமான நிலையங்களில் பிரத்யேக மருத்துவ சோதனை மையத்தை ஏற்படுத்தி, சீனாவில் இருந்து வருபவர்களை முழு பரிசோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார மையம் 2 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தியது. இதற்கு முன், சீனாவிலிருந்து சார்ஸ் வைரஸ் பரவிய போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை சீனா கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதாலும், வெளிப்படையாக வைரஸ் குறித்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்வதாலும் நல்ல ஒத்துழைப்பு தருவதாலும் நெருக்கடி நிலை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக அளவில் அச்சுறுத்தல் நிலவி வருவதால், கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து:
சீனாவில் இந்திய மாணவர்கள் 700 பேர் தங்கியிருந்து மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். விடுமுறைகாலம் என்பதால் பலர் நாடு திரும்பி விட்டனர். எஞ்சியவர்கள் பத்திரமாக இருக்கவும், தேவையான உதவிகளை பெறவும் அங்குள்ள இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் நம்பரை அறிவித்துள்ளது. மேலும், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து மும்பை வந்த 2 பேருக்கு வைரஸ்?
மும்பை விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் மூலம் சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக மும்பை மாநகராட்சி சார்பில் சின்ச்போகாளியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, 2 பேரிடம் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவில் இருவருக்கு நோய் தொற்று:
சீனாவை தொடர்ந்து ஹாங்காங், மக்காவ் மற்றும் பிற 6 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் ஏற்கனவே ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து திரும்பிய ஹூஸ்டனை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கு நேற்று தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெருக்களில் சுருண்டு விழும் சீனர்கள்:
சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலில் தாக்கிய வுகான் நகரில், இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கு  திடீரென சுருண்டு விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நோய் பாதித்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தியும், உடல் பலமும் குறைந்து இதுபோல் விழுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

களையிழந்த புத்தாண்டு:
சீனாவின் பன்றி புத்தாண்டு முடிவடைந்து, நேற்றுடன் எலி புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி வழக்கம் போல் சீன அரசு ஒருவார அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. எப்போதும் சீன புத்தாண்டு மிக கோலாகலமாக கொண்டாடப்படும். கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன புத்தாண்டு முற்றிலும் களை இழந்துள்ளது. தலைநகர் பீஜிங்கில் பல புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : cities ,China ,Corona , Coronavirus, Kills, China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...