இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்

புருசெல்ஸ்: இங்கிலாந்து அரசியலில் நிலவி வந்த மூன்றரை ஆண்டு கால இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரக்சிட் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது உறுதியாகி உள்ளது. கடந்த 2016ல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமென இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர்.  ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதை பிரக்சிட் என அழைக்கப்பட்டது. இதற்கான மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் அரசு திணறி வந்தது.  பிரதமர் தெரசா மே எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகினார். அதன்பின் பதவியேற்ற போரிஸ் ஜான்சன் சமீபத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை சந்தித்தார். இதில் அவரது கட்சி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.

Advertising
Advertising

இதைத் தொடர்ந்து அவரது தீவிர முயற்சியின் மூலம், பிரக்சிட் மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. சம்பிரதாய முறைப்படி, மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதனால், வரும் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து இது ஐரோப்பிய யூனியன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மசோதாவில் ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர்களான உர்சுலா வோன் டெர் லியன், சார்லஸ் மைக்கேல் ஆகியோர் முறைப்படி நேற்று கையெழுத்திட்டனர். இது வரும் 29ம் தேதி ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு மசோதாவை தடுப்பதற்கான அதிகாரம் இல்லை என்பதால், பிரக்சிட் மசோதா நிறைவேறுவது உறுதியாகும். இதன் மூலம் வரும் 30ம் தேதி நள்ளிரவு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முறைப்படி அனுமதி அளிப்பார்கள்.

Related Stories: