எனது முகம் பிரகாசமாக இருக்கும் ரகசியம் தெரியுமா? சாதனை சிறுவர்களிடம் மனம் திறந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: தனது முகம் பிரகாசமாக இருப்பதற்கான ரகசியம் என்ன என்பது குறித்து தேசிய விருது பெற்ற சிறுவர்களிடம் பிரதமர் மோடி மனம் திறந்து பேசினார். புதிய கண்டுபிடிப்பு, சமூகச் சேவை, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் வீர தீர செயல்களில் சிறந்து விளங்கும் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிரதம மந்திரி பால் புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் 49 சிறுவர்கள் இந்த தேசிய விருதை பெற்றனர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. கடந்த புதனன்று ஜனாதிகபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்நிலையில், தேசிய விருது பெற்ற சிறுவர்களுடன் பிரதமர் மோடி நேற்று தனது இல்லத்தில் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு வாழ்க்கை பாடம் மற்றும் பல்வேறு குறிப்புகளை அவர் வழங்கினார்.

அப்போது, பிரதமர் கூறியதாவது: நீங்கள் அனைவரும் என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்தில் நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். நீங்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளில் முயற்சித்துள்ள விதம், இந்த இளம் வயதில் உங்களால் செய்யப்பட்டுள்ள பணிகள், இவை எல்லாம் என்னை திகைப்படைய செய்துள்ளது. இளம் வயதில் துணிச்சல் மிக்க உங்களின் செயல்களை கேட்கும்போதும், உங்களிடம் பேசும் போதும் நான் உத்வேகத்தையும், சக்தியையும் பெறுகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் சிலர் என்னை பார்த்து, ‘உங்களுக்கு இதுபோன்ற பிரகாசமான முகம் எப்படி வந்தது?’ என கேட்டார்கள். அவர்களுக்கு நான் மிக சாதாரணமாக பதில் கூறினேன. நான் கடினமாக உழைக்கிறேன். எனக்கு அதிகமாக வியர்வை வெளியேறுகிறது. அதன் மூலமாக நான் எனது முகத்தை மசாஜ் செய்கிறேன். இது எனக்கு பிரகாசமான முகத்தை தருகிறது என கூறினேன்.

வியர்வை வெளியேறும் வகையில் நாம் கடினமாக பணி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறை நமது உடலில் இருந்து வியர்வை வெளியேற வேண்டும். கடினமாக உழையுங்கள். இதுபோன்ற செயல்களை செய்வதை நிறுத்தாதீர்கள். ஒரு வழியில் எத்தனை விருதுகள் வருகிறது என்பது பெரிய விஷயமல்ல.  நீங்கள் தேர்வு செய்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்றில் மக்கள் விருதுகள் மற்றும் பெருமதிப்பை பெறுகிறார். அப்போது அவர்கள் கர்வப்படுகிறார்கள் மற்றும் செயல்படுவதை நிறுத்தி விடுகிறார்கள். மற்றொன்று,  இதை விட சிறப்பாக செய்வதற்கு ஊக்குவிப்பதாக விருதுகளை சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்? விருது என்பது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி அல்ல. ஒரு வகையில் அவை உங்கள் வாழ்க்கையின் தொடக்கமாகும்.

உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது? உரிமைகளா அல்லது கடமைகளா? (அப்போது மாணவர்கள் கடமைதான் முக்கியமானது என ஒரே சேர கூறினார்கள். இதற்கு பதிலளித்த மோடி, ‘அப்படி என்றால், இதை இங்கேயே சட்டமாக்கி விடுவோம்,’ என நகைச்சுவையாக கூறினார்) இவ்வாறு மோடி பேசினார்.

‘முன்மாதிரியாக இருங்கள்’:

டெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டிற்கான உங்களின் கடமைகளை பின்பற்றுவதன் மூலமாக ஒரு முன்மாதிரிக்கு உதாரணமாக இருங்கள். இது, புதிய இந்தியாவை கட்டமைக்க வழிவகுக்கும்,” என்றார்.

Related Stories: