விமானம் புறப்பட 8 மணி நேரம் தாமதம்: விமான ஓடுபாதையில் பயணிகள் கலாட்டா: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: தாய்லாந்து செல்லும் தனியார்  விமானம் 8 மணி நேரம் தாமதமானதால் ஆத்திரம் அடைந்த பயணிகள், பெங்களூரு விமான நிலைய  ஓடுதளத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர். பெங்களூரு கெம்பேகவுடா விமான  நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 2.35 மணிக்கு தாய்லாந்துக்கு செல்லும் தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், 120 பயணிகள்  அமர்ந்து இருந்தனர். அப்போது, விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப  கோளாறு ஏற்பட்டது. பல மணி  நேரமாகியும் விமானம் கிளம்பவில்லை. ‘விமானத்தல் பெரிய கோளாறு ஏற்பட்டிருப்பதால்,  மாற்று விமானம் அழைக்கப்பட்டுள்ளது,’ என விமான ஊழியர்கள் கூறினர்.

இதனால், மாற்று விமானத்துக்காக விமானத்திலேயே பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால், 8 மணி நேரத்திற்கு  மேலாகியும் மாற்று விமானம் வரவில்லை. அதோடு, தங்களின் பணி நேரம் முடிந்து விட்டதாக பணிப்பெண்கள் புறப்பட்டு சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த 120 பயணிகளும்  விமானத்தில் இருந்து இறங்கி,  ஓடுதளத்திற்கு சென்று பிற விமானங்கள் செல்ல விடாதபடி மறியல் போராட்டம்  நடத்த முயன்றனர். இதையடுத்து, விமான  நிலைய அதிகாரிகள் மாற்று விமானத்திற்கு  ஏற்பாடு செய்து, பயணிகளை தாய்லாந்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த  போராட்டத்தால், மற்ற  விமானங்களும் புறப்படுவது தாமதமானது.

Related Stories: