விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் பேரவைக்கு வந்த பாஜ எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.    ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், `3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

 இந்நிலையில், வெட்டுக்கிளி தாக்குதலை அரசின் கவனத்துக்கு கொண்டு வர பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால், நேற்று கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான விவசாயிகள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே வெட்டுக்கிளி நிரம்பிய கூடையுடன் வந்துள்ளேன்,’’ என்றார்.

Related Stories: