குற்றப் பின்னணி உடையவர்களுக்கு அரசியல் கட்சிகள் சீட் தரக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் சீட் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கி அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும், மேலும், பத்திரிக்கை மற்றும் டிவி.யில் அது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.  ஆனாலும், அரசியலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுக்க முடியவில்லை என பாஜ.வை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

இது, நீதிபதிகள் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு பலன் அளிக்கவில்லை. அதனால், குற்றப் பின்னணி வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் சீட் வழங்க கூடாது என உத்தரவிட வேண்டும்,’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘ இது தொடர்பாக மனுதாரரும், தேர்தல் ஆணையமும் கலந்தாலோசித்து, அரசியலில் குற்றவாளிகளை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை குறித்து நீதிமன்றத்துக்கு ஆலோசனை அறிக்கையை  சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: