கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி உள்பட 4 பேர் கைது

ஓமலூர்: சேலத்தில் மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி, தங்கைகள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகேயுள்ள ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்டான இவரை கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள வனப்பகுதியில், அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். பின்னர், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரான ராமமூர்த்திநகருக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உடல் தகனத்தின் போது, அவரின் மனைவி கலா, தங்கைகள் சந்திரா, லட்சுமி மற்றும் லட்சுமியின் மகன் சுதாகர் உள்ளிட்ட சிலர் அரசுக்கு எதிராகவும், சுட்டுக்கொலை செய்தததற்கு பழி வாங்கியே தீருவோம் எனவும் சபதம் எடுத்து கோஷமிட்டனர்.

இதுபற்றி கிராமநிர்வாக அலுவலர் சங்கர், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து, வேறு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் உள்ள மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா மற்றும் ராமமூர்த்திநகரில் வசிக்கும் தங்கை லட்சுமி (45), அவரது கணவர் சாலிவாகனம், மகன் சுதாகர் (23), விவேக் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் தீவட்டிப்பட்டி வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலா, சந்திராவை தீவட்டிப்பட்டி போலீசார், சிறையில் இருந்தபடியே கைது செய்தனர். தொடர்ந்து நேற்று, இருவரையும் ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மாலதி, வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பின், 2 பேரையும் திருச்சி சிறைக்கு கொண்டுச் சென்று, அடைத்தனர். இதனிடையே லட்சுமி, அவரது மகன் சுதாகர் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

Related Stories: