கூடலூர் நியாய விலைக்கடையிலிருந்து குப்பையில் வீசப்பட்ட மருத்துவ காப்பீட்டு கார்டுகள்: பயனாளிகள் அதிர்ச்சி

கூடலூர்: கூடலூர் பகுதியில் நியாய விலைக்கடையிலிருந்து குப்பையில் வீசப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு கார்டுகளை பார்த்து பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் தேவர்சோலை பகுதியில் வாடகை கட்டிடத்தில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இயங்கி வந்தது. நியாய விலைக்கடை கடந்த சில மாதங்களுக்கு முன் தாலுகா அலுவலகம் சாலையில் உள்ள சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. கடையை காலி செய்யும்போது அங்கிருந்த தேவையற்ற பொருட்களை மூட்டை கட்டி மூலையில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கட்டிட உரிமையாளர் கடையை சுத்தம் செய்தபோது அங்கிருந்த மூட்டைகளை தூக்கி குப்பையில் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு கார்டுகள் விழுந்துள்ளன. அவற்றை எடுத்து பார்த்தபோது அதே பகுதியில் வசிக்கும் பலரது காப்பீட்டு கார்டுகள் கிடைத்துள்ளன. இந்த கார்டுகளுக்கு உரிய பலர் இறந்து போனதும் தெரிய வந்தது. அனைத்து கார்டுகளும் தமிழக அரசின் புதிய விரிவான காப்பீட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டவை. கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்காமல் குப்பையில் போட்ட நியாய விலைக்கடை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீதம் இருந்த அனைத்து கார்டுகளும் வருவாய் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.


Tags : Cuddalore, Fair Price, Junk, Medical Insurance, Cards, Beneficiaries, Shock
× RELATED தவறாக பயன்படுத்துகின்றனர் ஸ்மார்ட்...