×

நதிநீர் பிரச்னை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் முதல்வர் எடப்பாடியை சந்திப்பார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

சென்னை: நதிநீர் பிரச்னை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.சி.கருப்பணன், “தமிழகத்தில் கன்னியாகுமரியில் ரூ.15 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஒரு மாதத்திற்குள் அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. நதிநீர் பிரச்னையில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், “கண்ணகி கோயிலுக்கு நல்ல வழிப்பாதை போட்டு அதனை சுற்றுலாத்தலமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல தொல்லியல் சார்ந்து மிகப்பெரிய அகழாய்வு முசிறிப்பட்டினத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கீழடி மற்றும் முசிறி ஒப்பிட்டு பார்த்து இணைந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக” தெரிவித்தார். கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கூறும்போது, “கேரளாவில் உள்ள கண்ணகி கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கோயிலுக்கு செல்லும் பாதையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், அதுதொடர்பாக விரைவில் இரு மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கேரளாவிற்கு தமிழக அரசு சிறந்த முறையில் உதவிகளை செய்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே சகோதரர்களை போன்ற உறவு இருக்கிறது” என்றார்.

Tags : Kerala CM ,KC Karuppanan ,Edappadi , Minister of Water Supply, Kerala Chief Minister, Chief Minister Edappadi
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்