அமைச்சர் கருப்பணன் சர்ச்சை பேச்சு தி.மு.க வென்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்

சத்தியமங்கலம்: தி.மு.க. வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டு பேசுகையில், `ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் தி.மு.க. சில இடங்களில் வெற்றி பெற்றது.

சத்தியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை தி.மு.க. பிடித்தாலும் அவர்களால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. தி.மு.க. வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும். அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், தி.மு.க. வெற்றி பெற்றாலும், அவர்களால் திட்டப்பணியை முழுமையாக செய்ய முடியாது’’ என்றார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், `உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது குறித்து வருத்தப்படவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வெற்றியை பெறுவோம்’ என்றார்.

Related Stories: