குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை: டி.பி.ஐ அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 4 பதவியில் (2018-2019, 2019-2020ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில   அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருந்த 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து கடந்த ஆண்டு செப்.1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. அதன் பிறகு நவ.12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு   அழைக்கப்பட்டனர். மேலும் அங்கு தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். சொந்த மாவட்டத்திலேயே   தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன் இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி மற்றும் ஜன.2ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைக்கு நேரில் சென்று, தேர்வு மையங்களில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.   பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய வெளி மாவட்டங்களை சேர்ந்த 99 பேரை தகுதிநீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் அவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத தடை   விதித்து இன்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 39 பேர்களின் முறைகேடு முழுமையாக உறுதி செய்யப்பட்டதால், அவர்களுக்கு பதிலாக புதிதாக 39 பேர், இந்த போட்டித் தேர்வில் பெற்ற   மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார்கள் பார்த்தசாரதி மற்றும் வீரராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், குரூப் 4 முறைகேடு தொடர்பாக   சென்னையில் 12 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், டி.பி.ஐ அலுவலக உதவியாளர் ரமேஷ், 2017-ல் குரூப்-2(ஏ) தேர்வில் வெற்றிப்பெற்ற திருக்குமரன், தேர்வாளர் நிதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  தொடர்ந்து, 3 பேர் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விளக்கம்:

குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடு இல்லை என்றும் வழக்கில் முக்கிய பங்காற்றியவர்கள், இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப்-4 முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. தேர்வர்கள் சிலரை இடைத்தரகர்கள் அணுகி பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளது என்று சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: