×

வேலம்மாள் கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு: ரூ.532 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு...முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், 1986-ல் இருந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொன்றாக கிளை பரப்பி தற்போது சென்னை முகப்பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர்,  சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டகளில் வேலம்மாள் கல்வி குழுமம் இருந்து வருகிறது. மெட்ரிகுலேசன், சிபிஎஸ்சி பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது. 5 ஸ்டார் ஹோட்டல்  போல காட்சி அளிக்கும் வகையில் 150 ஏக்கரில் மதுரை ரிங்க ரோடு பகுதியில் உள்ள அனுப்பானடியில் வேலம்மாள் மருத்துவமனை அமைந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழில் ரீதியாகவும், உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும், வேறுபாடுகளுடனும் இயக்குவதற்காக வீரமாகாளி நினைவு நல அறக்கட்டளை, ரமணா கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல்  அவருடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் சர்வதேச பள்ளி, திருமண மண்டபம் ஆகியவற்றையும் கட்டியுள்ளார். தற்போது, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும்  கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதுடன், சுமார் 10 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்வி குழுமத்தில் அரசு நிர்ணயித்த கட்டத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. மேலும், புதிதாக பள்ளி மற்றும் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அதிகளவில் பணம்  நன்கொடையாக வசூலிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.  இதனையடுத்து, சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சுற்றுவட்டாரத்தில்  சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி,  வேலம்மாள் வித்யாலயா, சிபிஎஸ்சி பள்ளி, வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வேலம்மாள் நிறுவனம், ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ரூ.532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் மற்றும் வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் தொழில் நிறுவனம் ஒன்று வெளிநாட்டில் பதுக்கிய ரூ.1000 கோடி கறுப்பு பணம் மற்றும் அறக்கட்டளை என்ற பெயரில் 1990முதல் கறுப்புப் பணம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிறுவனத்தின் 13 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக சோதனை நிறைவடைந்தாலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Completion ,Velammal Education Group ,Completion of Income Tax Department Examination: Rs , Completion of Income Tax Department Examination at Velammal Education Group: Rs.
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா