தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் நடத்திய 1971ம் ஆண்டு சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் குறித்து ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையானது. ரஜினிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நீடித்து வருகிறது. ரஜினிகாந்தின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

இந்த பிரச்சனை தமிழகத்தில் புகைந்து கொண்டிருக்க, உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வந்த மர்ம கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்று விட்டனர். சேதமடைந்த பெரியாரின் கை மற்றும் முகம் முதலிய பாகங்கள் வெள்ளைத் துணியால் கட்டப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: