தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது, 3 மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்துக : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதே நேரத்தில் 3 மாதத்திற்குள் நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்குகளின் பின்னணி

*தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார்.

*இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

*இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

*இந்தச் சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

*பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டதால் நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.

*இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

*இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். மேற்கண்ட அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

*இந்நிலையில் இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் பின்வருமாறு...

*தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

*தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

*மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை சிறப்பு அதிகாரி கீதா சங்க நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்

*புதிய நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

*நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். (ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கடந்த ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது)

*நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

*நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக் கோரிய விஷாலின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

Related Stories: