×

சிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசாங்கம், இது மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து குடும்பத்துடன் சிங்கப்பூர் வந்த, 66 வயது முதியவர், காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து, அவரை, மருத்துவர்கள் தனி அறையில் வைத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரின் 37 வயது மகன் மற்றும், ஜனவரி 21ம் தேதியன்று வூஹானில் இருந்து சிங்கப்பூர் வந்த 53 பெண்ணையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2003ல் சிங்கப்பூரில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்குதலை சமாளித்த அனுபவம் உள்ளதால் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார். அதே சமயம் 33 பேரை பலி வாங்கிய சார்ஸ் தாக்குதல் அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்று நம்புவதாகவும் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் துவங்கிய வூஹானில் படிக்கும் இந்திய மாணவர்கள் 25 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் நோய் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. 1,200க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வூஹானில் படித்து வருகின்றனர். அங்கிருக்கும் இந்தியர்கள் நிலைமை குறித்த விவரங்களை 8618612083629 மற்றும் 8618612083617 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : attacks ,Singapore , Singapore, Corona Virus, Wuhan, China
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...