பிப்- 2 முதல் 8 வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடைபெறும் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை  தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பிப்- 2 முதல் 8 வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதை தெரிவித்தார்.

ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்  

2014, டிசம்பர் 31ம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது

.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கையெழுத்து இயக்ககம் நடத்த திமுக கூட்டணி முடிவு

அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிப்- 2 முதல் 8 வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறினார். சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடக்க உள்ளது என்பதையும் ஸ்டாலின் எடுத்துரைத்தார். மேலும் கையெழுத்து இயக்கத்துக்கு பின், மக்கள் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் நேரம் கிடைத்தால் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் பற்றி வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனிடையில் காஞ்சிபுரத்தில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகரம், நகரம் மற்றும் கிராமங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெறும். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை தமிழக அரசு நடத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு எதிராக தமிழ் மக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும், என்றார். அதோடு கட்சிகள் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

Related Stories: