காவல்துறைக்கு பல உத்தரவுகளை போடும் கவர்னர் கவனிப்பாரா?

வசூலில் சும்மா கிழி... ...இன்ஸ். வரதராஜன்

Advertising
Advertising

* போக்குவரத்து காவலுக்கே களங்கம்

* வாகன ஓட்டிகள் குமுறல்

புதுச்சேரி: புதுச்சேரி போக்கு வரத்து துறையில் வசூலில் இன்ஸ்பெக்டர் வரதராஜன் கொடிக்கட்டி பறக்கிறார். காவல்துறைக்கு பல அதிரடி உத்தரவுகளை போடும் கவர்னர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என வாகனஓட்டிகள் ஏங்கி கிடக்கின்றனர். புதுச்சேரி வடக்கு போக்குவரத்து காவல்துறையில் சக காவலர்களால்  செல்லமாக வசூல் மன்னன் என அழைக்கப்படுபவர் தான் இன்ஸ்பெக்டர் வரதராஜன். சனி,  ஞாயிற்றுக்கிழமை வந்தாலே இவருக்கு ஜாலிதானாம். சாமி பட பாணியில் சிக்னலில் ஜீப்பில் அமர்ந்து கொண்டு கண்காணிப்பில்  ஈடுபடுவார். அப்போது தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரியை கடந்து செல்லும்போது அவர்களை மடக்கி பிடிக்க தனது சக காவலர்களுக்கு உத்தரவிடுவார்.

வழக்கமாக லைசென்ஸ், ஆர்சி புக் என அனைத்தையும் கேட்டு பார்ப்பார். அனைத்தும் சரியாக இருந்தால் அதிக பேர் பயணம் செய்வதாக சார்ஜ் சீட் போட முயற்சி செய்வார். உடனே அருகில் இருக்கும் காவலர்கள், எதையாவது கட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்புங்கள், நேரம் ஆகிறது கூறி கறந்துவிடுவார்கள். சென்னைக்கு செல்பவர்கள், புதுச்சேரியை கடக்கும்போது சரக்கு போடாமல் 60 சதவீதம் பேர் செல்லமாட்டார்கள். இன்ஸ்பெக்டர் வரதராஜனிடம் இவர்கள், சிக்கிவிட்டால் கதை முடிந்துவிடும். டிரைவர் குடிக்கவில்லை என கூறினாலும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி அவர்களை அலைக்கழிக்க செய்வார்கள்.

அவர்கள் நொந்துபோய், வெயிட்டாக கொடுத்துவிட்டு கிளம்புவார்கள். இதனால் தமிழகம் உள்பட வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு போட்டது வெகு குறைவு தான் என்கிறது காவல்துறை புள்ளிவிவரம்.

அதே நேரத்தில் உள்ளூர்காரர் பிடிபட்டால் வேறு  ஸ்டைலில் வசூலிப்பாராம், அதனாலே இவருக்கு  மன்னன் என்ற பட்டத்தை சக  காவலர்களே வழங்கியிருக்கின்றனர்.

பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுமாறு  முதல்வர் நாராயணசாமி கூறினாலும், இவருக்கு மட்டும் வாயில் சாக்கடை வார்த்தைகள்தான் வந்துவிழுமாம். இதனால் மன உளைச்சலில் இந்த  இடத்தை விட்டு போனால்  போதும் என கேட்பதை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இதில் யாராவது போன் எடுத்தால் என்ன ரெக்கமெண்ட்டா எனக்கூறி அவர்களை ஒருமையில் பேசுவார்கள். உடனே அருகில் இருந்தால் சனி, ஞாயிறு கோர்ட் லீவு. வழக்கு போட்டு கைது செய்தால் இரண்டு நாள் ஜெயிலில் தான் இருக்க  வேண்டும் என அருகில் உள்ள காவலர்கள் கூறவே அவர் களுக்கு பீதி ஏற்பட்டு நண்பர்களை வரவழைத்து பணத்தை கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். இதனால் புதுவை முழுவதும் இவருக்கு கல்லா இன்ஸ். வசூல் மன்னன் இன்ஸ். கறவை இன்ஸ்.என பல பட்ட பெயர்கள் உண்டு. இதனால் இவர் மீது கவர்னர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் குமுறலாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் அவதி

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் புதுவை அரசு, செயற்கை மணல் திட்டு உள்பட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டவுசர் போட்டுகொண்டு ஊரை சுற்றி பார்க்கும் சுற்றுலா  பயணிகளை பிடிப்பது தான் டார்கெட். வெளியூரில் வந்திருப்பவர்களை  பிடித்தால்தான் எந்த பிரச்னையும் இல்லை. கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு  மரியாதையாக கிளம்பிவிடுவார்கள்.

வேட்டையாடு...விளையாடு...

இரவு 10 மணி ஆனால் இசிஆரில் தான் பணி. ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு மருத்துவ மாணவர்களை குறி வைத்து பிடிப்பார். அவர்களை பிடித்து மருத்துவ மாணவனாக இருக்கிறாய்? குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறாயா? வாயை ஊது. என கேட்டு அசிங்கமாக பேசுவார். அதிலும் உனக்கு எல்லாம் எப்படி சீட் கிடைச்சது என தெரியவில்லை. காசு கொடுத்துவிட்டு வாங்கிவிட்டு இங்க குடிச்சுட்டு திரிகிறாய் என கேவலமாக பேசுவார். இதில் பலர் சார் நீங்கள், சட்டத்தின்படி நடவடிக்கை எடுங்கள் என கூறினால் உடனே கோபம் வந்து வாகனம் பறிமுதல் செய்து டிரங் அன்டு டீரைவ் என வழக்கு பதிவு செய்யப்படும். இதனால் இரவு பணி என்றாலே வேட்டையாடு விளையாடு தான்.

வண்டி சாவி பிடுங்குவது தான்தனி ஸ்டைல்...

யாராவது ஒன்வே யில் வந்தாலோ அல்லது குடித்துவிட்டு வந்தாலோ உடனே வாகனத்தில் இருந்து சாவியைதான் பிடுங்கி பாக்கெட்டில் போட்டுக்கொள்வதும் இவரது தனி ஸ்டைல். அதன்பிறகு தான் பேரமே நடக்கும். இல்லையென்றால் வாகனத்தை ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றுவிடுவார். பணம் படியவில்லை என்றால் அடுத்து வழக்கு தான் பாயும்.

Related Stories: