ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு: 2018-ல் 78-ல் இருந்த இந்தியாவுக்கு தற்போது 80-வது இடம்

பெர்லின்: ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு வெளிப்படைத்தன்மை வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் கடந்த ஆண்டில் இருந்ததை விட இந்தியா 2 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியின், பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு ஆண்டு தோறும், ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் ஊழல் குற்றங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

180 நாடுகளில் ஊழல் புழக்கத்தில் இருப்பதை பல்வேறு ஆய்வு மூலம் சேகரித்து மதிப்பெண் மூலம் அளவீட்டை அந்நிறுவனம் வெளியிடுகிறது. அதன்படி 2019-ம் ஆண்டில் ஊழல் குறைவான நாடுகளில் டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதே நேரம் இந்தியாவுக்கு 80-வது இடம் கிடைத்துள்ளது. 2018-ல் 78-ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 80-வது இடத்திற்கு பின்தங்கியது. பொதுத்தேர்தலில் மிகவும் சாதாரணமாக பணம் செலவிடப்படுவது,

பெரும் முதலாளிகள் குரலுக்கு அரசு செவி சாய்ப்பது போன்றவை இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 87-வது இடத்தில் இருந்த சீனா தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த 2017ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்த இந்தியா 2018ம் ஆண்டில் 78வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ஊழல் நிறைந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: