சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல்

பீஜிங்: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வுகான் நகரில் பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் வசிக்கும் 1.1 கோடி மக்கள் வெளியேறவோ, வேறு நகரைச் சேர்ந்தவர்கள் வுகானுக்கு வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் புதுவகையான நோயை பரப்பும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. சார்ஸ் வகையை சேர்ந்த இந்த புதிய வைரஸ், சளி மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் ஆட்கொல்லியாகும்.

சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்துதான் இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது. தற்போது, ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி இருக்கிறது. தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங் மட்டுமின்றி அமெரிக்காவிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பீதி நிலவுகிறது. சீனாவில் 830 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 200 க்கு அதிகமாக அதிகரித்துள்ளது. இதனை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ள உலக சுகாதார மையம், 10 நாட்களுக்குள் இதுபற்றி மீண்டும் கூடு ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: