சிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 40 வீரர்கள் வீரமரணம்... 80 பேர் படுகாயம்

டமாஸ்கஸ்: சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது.  அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு  ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது.

இதில் முக்கிய பங்கு வகித்தது குர்து படைகள்தான். அவர்கள்,  அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரவாதிகளை விரட்டி, ஐஎஸ் பிடியில் இருந்த நகரங்களை மீட்டனர். ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ்  பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். குர்து படைகளுக்கு தந்த ஆதரவை அவர் விலக்கிக் கொண்டார். இதனால், குர்து படைகளுக்கு எதிராக உள்ள அண்டை நாடான துருக்கி தாக்குதல் நடத்த பச்சைக் கொடி காட்டியது போன்றதாகி விட்டது.

குர்திஷ் போராளிகள் துருக்கியில் பல்வேறு நாசவேலை செய்து வருவதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடம் இருந்து மாகாணத்தை மீட்க ர‌ஷிய படையின் உதவியுடன் சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இதுஒருபுறம் இருக்க அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கினர். இந்த தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Related Stories: