×

அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் பரிசீலனை: பேரவையில் விவாதிக்க முடிவு

திருமலை: ஆந்திராவில் அரசு கொண்டு வரும் மசோதாக்கள் அனைத்தையும் எதிர்க்கட்சியினர் சட்ட மேலவையில் தடுப்பதால், இந்த மேலவை கலைப்பது பற்றி முதல்வர் ஜெகன் மோகன் பரிசீலித்து வருகிறார். ஆந்திர மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: ஆந்திர மாநிலம் சம வளர்ச்சி அடைவதற்காக சட்ட பேரவையில் மூன்று தலைநகருக்கான மசோதாவையும், சிஆர்டிஏ.வை ரத்து செய்ததற்கான மசோதாவையும் நிறைவேற்றி சட்டமேலவைக்கு அரசு அனுப்பினால், மேலவைத் தலைவர் ஷரீப் அவற்றை நிபந்தனைகளை மீறி தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ஏழை பிள்ளைகளும் ஆங்கில வழியில் கல்வி படிக்க வேண்டும் என சட்ட மசோதா கொண்டு வந்தாலும் தடுக்கின்றனர். சட்ட மசோதாவை தடுப்பவர்களின் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழிக் கல்வி படிக்க வேண்டும். ஏழை பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி படிக்கக் கூடாது என நினைக்கின்றனர். இதுபோல், தாழ்த்தப்பட்டோருக்கு நல வாரிய அமைக்கும் சட்டத்தையும் மேலவையில் தடுத்து வருகின்றனர். மேலவைக்காக மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், மக்கள் பணத்தால் செயல்படக் கூடிய சட்டமேலவை, மக்கள் நல திட்டங்களை தடுக்கிறது. தலைநகர் எங்கு அமைய வேண்டும் என்பதற்கு எந்தவித சட்டமும் இல்லை. முதல்வர் எங்கு இருந்து செயல்படுகிறாரோ, அதுவே தலைநகரம். தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஊட்டியில் இருந்தபடி அரசு நிர்வாகத்தை நடத்தினார். புயல் வந்தபோது சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் 20 நாட்கள் இருந்து அரசு நிர்வாகத்தை நடத்தினார்.  

நாட்டில் 28 மாநிலங்கள் உள்ள நிலையில், 6 மாநிலத்தில் மட்டுமே சட்டமேலவை உள்ளது. ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் உள்ள மாநிலத்தில் இந்த சட்ட மேலவை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதம் செய்வதற்காக திங்கட்கிழமை பேரவை சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். ஆந்திராவில் என்.டி.ராமராவ் முதல்வராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் ஆந்திராவின் சட்டமேலவை மூன்று மாதங்களில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 2005ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி முதல்வரான போது மீண்டும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Jagan , Government proposals, impasse, legislation, dissolve, CM Jagan, review
× RELATED சீட் கொடுக்காததால் விரக்தி; அதிமுக...