எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் குண்டுவெடிப்பு: பெங்களூருவில் பதற்றம்

பெங்களூரு: பெங்களூருவில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு சாந்திநகர் தொகுதி எம்எல்ஏ என்.ஏ.ஹாரீஸ். இவருக்கு ஜன.11ம் தேதி பிறந்த நாள். இவரது பிறந்த நாள் மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாளை இணைத்து அப்பகுதியினர் ஒரே விழாவாக நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை பகுதியில் கொண்டாடினர். இதில் எம்எல்ஏ ஹாரிஸ் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். எம்எல்ஏ ஹாரிசின் வருகையை முன்னிட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ஹாரீசின் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் ஹாரீசின் கால், தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் சிலரும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மத்திய மண்டல டி.சி.பி. சேத்தன் சிங் ரத்தோர் மற்றும் விவேக்நகர் போலீசார் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகேயுள்ள  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்தில் கிடந்த வெடிப்பொருட்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வெடித்த பொருளில் பாலீஸ் குண்டுகள் மற்றும் சக்தி குறைந்த வெடி மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதனால் வெடிகுண்டு வெடித்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் உடனே குண்டு செயலிழப்பு அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் வெடிபொருளின் உதிரிபாகங்களை சேகரித்து ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து திரும்பிய என்.ஏ.ஹாரீஸ் அளித்த பேட்டியில், ‘‘வெடிவிபத்தை நினைக்கும்போது இப்போதும் எனக்கு பயமாக இருக்கிறது. என்ன நோக்கத்திற்காக, யார் இந்த வெடிவிபத்தை ஏற்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்’’ என்றார்.

Related Stories: