கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்துக்கு அனுமதி: ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்

பெங்களூரு: கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்திற்கு கர்நாடக ஆளுநர் வி.ஆர்.வாலா ஒப்புதல் அளித்துள்ளார். மனிதர்களிடம் காலம் காலமாக புரையோடி இருக்கும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. புதையலுக்காக நரபலி கொடுப்பது, எதிரிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் பில்லி, சூனியம் கட்டுகள் போடுவதாக ஏமாற்றுவது ஆகியவற்றை தடுக்க, கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதாவை மேலவை, பேரவையில் தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இந்நிலையில், மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜ ஆட்சி அமைந்துள்ள சமயத்தில் இச்சட்டத்துக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜனவரி 4ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்டுள்ளது எவை?

* மாய, மந்திரம், பில்லி, சூனியம், புதையல் தேடுவது.

* மனித உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி அடித்து இம்சைப்படுத்துவது.

* தன்னிடம் கடவுளுக்கு இணையான சக்தி உள்ளது. நான் கடவுளை பார்த்தேன், அவர் சொல்வதை அருள்வாக்காக சொல்கிறேன் என ஏமாற்றுவது.

* நோய் குணமாக வேண்டும் என்பதற்காக உயரமான இடத்தில் இருந்து குழந்தைகளை கோயில் தேர் மீது வீசுவது, முள், கம்பிகள் மீது படுக்க வைப்பது, கிரகணம் பிடிக்கும் காலத்தில் பள்ளம் தோண்டி கழுத்து வரை மண்ணில் புதைப்பது.

* பக்தி என்ற பெயரில் கோழி, பிராணிகளின் கழுத்தை கடித்து குதறி ரத்தம் குடிப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.

மீறினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Stories: