சிஏஏ. ஆதரவில் கருத்து வேறுபாடு எங்கு விருப்பமோ அங்கு செல்லலாம்: எம்பி. பவன் வர்மாவுக்கு நிதிஷ் பதிலடி

பாட்னா: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்ததற்கும், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, இக்கட்சியின் மாநிலங்களவை எம்பி பவன் வர்மா, முதல்வர் நிதிஷ் குமாருக்கு 2 பக்க கடிதம் அனுப்பினார். அதை டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் வெளியிட்டார். மேலும், நிதிஷ் குமாருடன் தனிப்பட்ட முறையில் பேசிய விஷயத்தையும் அதில் சுட்டி காட்டியிருந்தார். கட்சியின் நிலைப்பாடு குறித்து நிதிஷ் குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். பாட்னா வந்திருந்த பவன் வர்மாவால், முதல்வரை சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், பவன் வர்மா சர்ச்சை பற்றி நிதிஷ் குமார் கூறியதாவது:

பவன் வர்மா நன்கு படித்தவர். அவர் மீது நான் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அவர் விடுத்துள்ள அறிக்கை என்னை திகைக்க செய்துள்ளது. எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் குழப்பம் இல்லை. தெளிவான முடிவு எடுத்துள்ளோம். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றால் கட்சி கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம். தனிப்பட்ட முறையில் பேசிய உரையாடலை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் பேசியதை நான் பொதுவில் எப்போதாவது கூறி உள்ளேனா? அவருக்கு எங்கு விருப்பமோ, அங்கு செல்லலாம். இவ்வாறு நிதிஷ் கூறினார். ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த பவன் குமார், கடந்த 2013ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரின் நிதிஷ் குமாரின் ஆலோசகராக பணியாற்றினார். பின் அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: