×

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடும் ரூ.449 கோடி டெண்டருக்கான இறுதி முடிவை எடுக்க தடை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை குளங்கள், ஏரிகளுக்கு திருப்பிவிடும் திட்டத்திற்கான ரூ.449.50 கோடி டெண்டரை இறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தை சேர்ந்த அருள்நம்பி இன்ஜினியரிங் கன்சல்டன்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் உபரியாக வெளிவரும் தண்ணீரை அங்குள்ள சரபங்கா பேசின் வழியாக சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான திட்டத்தை தமிழக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இதற்கான மொத்த மதிப்பு ரூ.449 கோடியே 50 லட்சம். இந்த டெண்டரில் பங்கேற்பவர்களுக்கான அறிவிப்பை பொதுப்பணித்துறை கடந்த 6ம் தேதி அறிவித்தது. அதில், டெண்டர் விண்ணப்பங்களை ஜனவரி 9ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டெண்டர் ஜனவரி 24ம் தேதி மதியம் 3.30 மணிக்கு முடிவடையும் என்று கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்தின்படி டெண்டர் நடைமுறைகளுக்கு 30 நாட்கள் தரப்பட வேண்டும். ஆனால், இந்த டெண்டர் விஷயத்தில் 15 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு முரணானது. மேலும், டெண்டர் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இண்டியன் டிரேட் ஜர்னலில் வெளியிடவில்லை.

ஏற்கனவே, கடந்த 2009ல் இதே திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டு ஒருவரும் பங்கேற்காததால் ரத்து செய்யப்பட்டு தற்போது கூடுதல் மதிப்பீடுடன் கோரப்பட்டுள்ளது. ஆனால், இதில் விதிமுறைகள் முழுவதும் மீறப்பட்டுள்ளன. எனவே, கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம், ஆனால் டெண்டர் குறித்த இறுதி முடிவை எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags : dam ,Mettur dam ,Mettur , Mettur Dam, Surface Water. Lake, Pond, Rs
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு