ஜெயக்குமார் சர்ட்டிபிகேட் எனக்கு தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்

நாகர்கோவில்: ‘‘அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சர்ட்டிபிகேட் தர வேண்டிய தேவையில்லை’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எதுவும் செய்யவில்லை, அவர் அமைச்சராக இருந்ததே வேஸ்ட்தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ண் நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி: அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சர்ட்டிபிகேட் தர வேண்டிய அவசியம் இல்லை. இரு பெரிய நிகழ்வுகளில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பதை ஜெயலலிதா பேசியுள்ளார். கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. அதனால் நான் மவுனமாக உள்ளேன். 2021 தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.

தமிழகத்தின் தென் பகுதிகளில் மணல் கடத்தல்காரர்களுக்கு யார் பக்கபலமாக இருப்பார்கள் என்பது உலகறிந்த விஷயம். எந்த அரசியல்வாதி, எந்த எம்.எல்.ஏ பின்னால் இருந்தார் என்பது தெரியும். எனது சொத்து கணக்கு, எனது உடன் பிறந்தவர்கள், குடும்பத்தினர் அத்தனை பேரின் சொத்துக்கணக்கை கொடுக்க தயாராக உள்ளேன். ஒரு அடி நிலம் புதியதாக வாங்கினேன், வங்கியில் பணம் போட்டுள்ளேன் என்று காண்பித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன். அதேபோல முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சொத்து கணக்கை காட்டட்டும், அவர் ஆசிரியராக இருந்தவர். இருந்தாலும் அவர் குற்றச்சாட்டு கூறியதால் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: