×

நீதிமன்றம் குறித்து சர்ச்சை பேச்சு எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை: போலீசுக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்,  சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதில் குறிப்பாக, மேடைகள் அமைக்கக்கூடாது என கூறியிருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த 14.9.2018ல் கொண்டாடப்பட்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு மேடை அமைப்பது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள், ‘போலீசார் மேடை போட அனுமதிக்கவில்லை’ என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியாற்றி வருவதாகவும், இப்படி பல்வேறு நிலைகளில் தரக்குறைவான வார்த்தைகளில் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார். மேலும் நீதிமன்றம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசினார். இதனைத்தொடர்ந்து, திருமயம் போலீசார், எச்.ராஜா மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமான வார்த்தைகளால் பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இவ்வழக்கில் இதுவரை எவ்விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பதும் தெரியவில்லை. எனவே ட வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி, “எச்.ராஜா தொடர்ந்து இதுபோல் தவறான முறையில் பலரையும் பேசி வருகிறார். கடந்த 2018ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்தியில் ஆளுங்கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். எனவே உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார். அப்போது அரசு தரப்பில், “வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தலைமைச் செயலகத்தில் உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கு ஆவணங்கள் எதற்காக தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார். பின்னர் சம்பந்தப்பட்ட வழக்கின் மீதான விசாரணையை 2 மாதத்திற்குள் முடித்து, குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Court ,H Raja , Court, Controversy, H Raja, Case, 2 Months, Charge Sheet, Icort Branch
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...