கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு ரூ.1.8 லட்சம் கோடியாக உயர்வு: முதல்வர் எடப்பாடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கூறினார். சென்னை தரமணியில் புதிய ஐடி வளாகம் துவக்க விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. இந்த பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன்மூலம் ரூ.8 ஆயிரத்து 835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றை சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.47 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீட்டினை தமிழக அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது. சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற அளவிற்கு டிட்கோ நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தினை அமைக்க உள்ளது.

இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க வாய்ப்பு உள்ளது. தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு தமிழக அரசு. இதன்மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் காகர்லா உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: