×

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு கடைசி ஆசையை பற்றி கூறாமல் மவுனம் காக்கும் குற்றவாளிகள்: தண்டனையில் இருந்து தப்பும் ஐடியாவா?

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளிடம், `உங்களின் கடைசி ஆசை என்ன?’ என்று திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், வினய்  சர்மா, அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு பிப்.1ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இவர்களின் சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஜனாதிபதி, உள்துறை அமைச்சகம் என அனைத்து தரப்பிலும் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த 14 நாட்களுக்கு பிறகே தூக்கிலிட வேண்டும் என்ற விதியை, தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக குற்றவாளிகள் கருதுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், வரும் 1ம் தேதி தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், `உங்களின் கடைசி ஆசை என்ன?’ என கடைசியாக குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, சொத்துக்களை யாருக்கு அளிப்பது?’ என்பது குறித்து நிர்பயா குற்றவாளிகளிடம் திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.ஆனால், தங்களின் தூக்கு தண்டனை மேலும் தள்ளிப் போகலாம் என்ற நம்பிக்கையில், இதற்கு பதில் கூறாமல் குற்றவாளிகள் மவுனம் காப்பதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.இதற்கிடையே, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாளுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நெறிமுறைகளை வகுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க மத்திய அரசு நேற்று கோரிக்கை விடுத்தது.

* நீதிபதிக்கு திடீர் பதவி உயர்வு
நிர்பயா கொலை வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதித்தவர் கூடுதல் செசன்ஸ் நீதிபதி சதீஷ் குமார் அரோரா. இந்த தண்டனையை டெல்லி  உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி சதீஷ் குமார் அரோராவை, பிரதிநிதித்துவ அடிப்படையில் அடுத்த ஓராண்டிற்கு உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* குற்றவாளிகள் மரண தண்டனையை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து
மற்றொரு மரண தண்டனை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறுகையில், ‘‘ஒருவர் எல்லாவற்றுக்கும் முடிவு இல்லாமல் போராட முடியாது. மரண தண்டனையை இறுதி செய்வது மிகவும் முக்கியமானது. மரண தண்டனைக்கு எதிராக எப்போது வேண்டுமானலும் மனு செய்யலாம் என்ற எண்ணத்தில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இருக்கக் கூடாது. நீதிமன்றம் சட்டப்படி நடக்க வேண்டும். சமுதாயத்துக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் கடமை நீதிபதிகளுக்கும் உள்ளது,’’ என்றனர். நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து மனு செய்வதால், தண்டனையை நிறைவேற்றுவது தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது. எனவே, கருணை மனு தாக்கலுக்கான கெடுவை மரண தண்டனை வழங்கிய தேதியில் இருந்து 7 நாட்களாக நிர்ணயிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் புதிய மனு தாக்கல் செய்தது. இதுபோன்ற நிலையில், நீதிபதிகள் இந்த கருத்தை கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags : Nirbhaya murder, prosecution, execution, last wish, silence, criminals, punishment, Idea?
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...