×

ரூ.21 லட்சம் ஏமாற்றியதாக டிராவல் ஏஜென்ட் புகார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கு

அவுரங்காபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் உள்பட 3 பேர் மீது ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக டிராவல் ஏஜென்ட் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் நகரை சேர்ந்த, ‘தனிஷ் சுற்றுலா டிராவல்ஸ்’ நிறுவன உரிமையாளர் முகமது ஷஹாப். இவர் அவுரங்காபாத்தின் சவுக் காவல் நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீன் மீது நேற்று முன்தினம் பண மோசடி புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் தனி உதவியாளர் முஜிப்கான் கேட்டுக் கொண்டதன்  பேரில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் பல்வேறு சர்வதேச விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தேன். ஆனால், அவர் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார். பணத்தை தருமாறு மீண்டும் கேட்டபோது முஜிப்கானின் நண்பர் சுதேஷ் அவாக்கல் எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். அதில், ரூ.10.6 லட்சம் பணத்தை எனக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், பணம் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து, கடந்த நவம்பர் 24, 29ம் தேதிகளில் காசோலையை அனுப்பி வைத்துள்ளதாக கூறிய அவாக்கல், வாட்ஸ்அப்பில் காசோலை படங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதும் எனக்கு காசோலை கிடைக்கவில்லை. எனவே அசாருதீன், முஜிப்கான் மற்றும் சுதேஷ் அவாக்கல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அசாருதீன் உள்பட 3 பேர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், உள்நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

* ‘ரூ.100 கோடி கேட்பேன்’
தன்மீதான குற்றச்சாட்டை அசாருதீன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `என்மீதான புகாரில் எந்த உண்மையும் இல்லை. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு வருகிறேன். என்மீது மோசடி வழக்கு தொடர்ந்தவர்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்வேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Travel Agent ,Azharuddin Azharuddin ,cricketers , Rs 21 lakh, cheating, travel agent, complaint, former cricketer, Azharuddin, 3 others, fraud case
× RELATED ராம் மந்திர் ‘பிரான் பிரதிஷ்தா’ அழைப்பைப் பெற்ற விளையாட்டு வீரர்கள்..!!