உளவுத் தகவலை பெறுவதில் மோதல்; உள்துறை அமைச்சரிடமிருந்து சிஐடி பிரிவை பறித்தார் முதல்வர்: அரியானா அரசில் பரபரப்பு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உளவுத்துறை தகவலை தனக்கும் தெரிவிக்கும்படி முரண்டு பிடித்த உள்துறை அமைச்சரிடம் இருந்து, சிஐடி பிரிவை முதல்வர் கட்டார் பறித்துள்ளார். அரியானா உள்துறை அமைச்சராக இருப்பவர் அனில் விஜ். இவரது துறையின் கீழ் சிஐடி பிரிவு இருந்து வந்தது. உளவுத் தகவல்களை சிஐடி பிரிவினர் முதல்வருக்கு மட்டுமே தெரிவித்து வந்தனர். விஜ்ஜிடம் எதுவும் கூறுவதில்லை. இதனால், சிஐடி பிரிவுக்கு தலைமை தாங்கும் ஏடிஜிபி அனில் ராவ் மீது, அமைச்சர் அனில் விஜ் கோபம் அடைந்து, அவருக்கு பதில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த் ஜாதவை சிஐடி தலைவராக நியமிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இதனால், முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் அனில் விஜ்ஜுக்கும் இடையே பிரச்னை நிலவியது. இந்நிலையில், அமைச்சர்களின் சில இலாக்கக்கள் முதல்வரின் பரிந்துரையின் பேரில் அரியானா ஆளுநர் நேற்று மாற்றினார். இதில், விஜ் கட்டுப்பாட்டில் இருந்த சிஐடி பிரிவு முதல்வர் வசம் சென்றது. மேலும், பல்வேறு பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டன.

* ‘முதல்வரே முதன்மையானவர்’

தன்னிடமிருந்த சிஐடி பிரிவை முதல்வர் கட்டார் பறித்ததால் உள்துறை அமைச்சர் அனில் விஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி நேற்று அளித்த பேட்டியில், ‘‘முதல்வரே முதன்மையானவர். அவரால் எந்த துறையையும் எடுத்துக் கொள்ள முடியும், எந்த துறைகளையும் பிரிக்க முடியும்,’’ என்றார்.

Related Stories: