இந்து மகாசபையின் பிரிவினை அரசியலை நேதாஜி எதிர்த்தார்: மம்தா பேச்சு

டார்ஜிலிங்: ‘இந்து மகா சபையின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி எதிர்த்தார். மதச்சார்பற்ற இந்தியாவுக்காக அவர் போராடினார்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழா மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: இந்து மகாசபையின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்தார். அவர் மதச்சார்ப்பற்ற இந்தியாவுக்காக தீவிரமாக போராடினார்.

ஆனால், தற்போது மதச்சார்பின்மையை பின்பற்றுபவர்களை அழிக்கும் முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. நேதாஜியின் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். நேதாஜி தனது போராட்டம் மூலம் ஒன்றுபட்ட இந்தியாவை காண விரும்பினார். அவருக்கு நாம் சிறந்த அஞ்சலியை செலுத்த விரும்பினால், அவர் காண விரும்பிய ஒன்றுபட்ட இந்தியாவுக்காக போராட வேண்டும். மர்மமாக மாயமான நேதாஜியை கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சி எதையும் எடுக்கவில்லை. அவர் மாயமாகி 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வெட்கக் கேடானது. இவ்வாறு அவர் பேசினார்.

* நேதாஜி, தாக்கரேவுக்கு அமித்ஷா புகழாரம்

நேதாஜி, சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அவர்கள் இருவருக்கும் தனது அஞ்சலியை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில். `சுதந்திர போராட்ட வீரரான நேதாஜிக்கு அவரது பிறந்தநாளில் எனது இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்தார். தாய் நாட்டின் மீதான அவரது தீவிர பற்றுதல் நமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது,’ என தெரிவித்துள்ளார். மற்றொரு டிவிட்டர் பதிவில், `மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பிறந்ததினமான இந்நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் தனது பேச்சால் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் ஒருபோதும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: