முதல்வர் முன்னிலையில் நடந்த விழாவில் ஒரே நாளில் அசாமில் 644 தீவிரவாதிகள் சரண்

கவுகாத்தி: அசாமில் முதல்வர் முன்னிலையில் நடந்த விழாவில் நேற்று ஒரே நாளில் 644 தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். அசாமில் பல்வேறு தீவிரவாத அமைப்பினர் உள்ளனர். இவர்கள் அமைதிப் பாதைக்கு திரும்பினால் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகள், மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளதால், தொடர்ந்து தீவிரவாத அமைப்பில் இருந்து உயிரை விடவும் தீவிரவாதிகள் விரும்பவில்லை.

இந்நிலையில், கவுகாத்தில் நேற்று முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையில் தீவிரவாதிகள் சரணடையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உல்பா, என்டிஎப்பி. ஆர்என்எல்எப், கேஎல்ஓ, இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவு என்று பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் அரசிடம் சரணடைந்தனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சர்பானந்த சோனோவால் பேசுகையில், ‘‘அசாமின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நீங்கள் அமைதிப்பாதைக்கு திரும்பி உள்ளது, மக்களை மகிழ்வடைய வைத்துள்ளது. மேலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இதேபோல், மற்ற தீவிரவாதிகளும் அமைதிப்பாதைக்கு திரும்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

Related Stories: