வியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முகமது நூருல்லா (65). இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 13ம் தேதி டிப்டாப் உடையணிந்த 5 பேர் காரில் வந்திறங்கினர். தங்களை வருமான வரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் என நூருல்லாவிடம் அறிமுகப்படுத்தி அடையாள அட்டைகளை காண்பித்தனர். பின்னர் 5 பேர் கும்பல் பீரோவில் இருந்த ₹3.10 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, ‘‘இதற்கான ஆவணங்களை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’’ கூறிவிட்டு தப்பி சென்றனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரித்தபோது நூருல்லாவின் வீட்டுக்கு வந்தவர்கள் போலி ஐ.டி அதிகாரிகள் என தெரியவந்தது.

இதையடுத்து அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நூருல்லாவின் சித்தப்பாவான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மதார் (70) என்பவர் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிந்தது. மதார் ஓய்வு பெற்ற பின்னர், அவரது குடும்ப செலவுக்கு நூருல்லா பண உதவி செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நூருல்லா பண உதவியை நிறுத்திவிட்டார். இதையடுத்து நூருல்லாவின் வீட்டில் போலி ஐடி அதிகாரிகளை அனுப்பி பணம், நகைகளை கொள்ளையடிக்க மதார் திட்டமிட்டார். அதன்படி, தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ், செந்தில்குமார் அடங்கிய 5 பேர் கும்பலுக்கு பணம் கொடுத்து கொள்ளை சம்பவத்துக்கு மதார் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மதார் என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: