×

2014-15 முதல் மாற்றமின்றி நீடிக்கும் வருமான வரி வரம்பில் மாற்றம் வருமா?

* 7 லட்சம் வரை 5 சதவீத வரி விதிக்க திட்டம்
* புதிய பரிந்துரைப்படி 60,000 வரை வரி சேமிக்கலாம்

புதுடெல்லி: அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம். தற்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இது 2.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை என உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டிலும் சரியும் என்பதை பல்வேறு நிதி அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன. சமீபத்தில் சர்வதேச நிதியம் தாக்கல் செய்ய அறிக்கையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்தை தாண்டாது என குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு தொழில்துறைகள் முடங்கியதால், பொருளாதார வளர்ச்சி மிகவும் சவாலாக உள்ளது. எனவே, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  இதுபோன்றே, நடுத்தர மக்கள், வருமான வரிச்சலுகை உயர்த்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், 2014-15 நிதியாண்டுக்கு பிறகு எந்த மாற்றமும் இன்றி, ஆண்டு வருவாய் 2.5 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பே நீடித்து வருகிறது.  கடந்த இடைக்கால பட்ஜெட்டில் இந்த வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்ற நிலைதான் உள்ளதே தவிர, வருமான வரி விலக்குக்காக உச்சவரம்பாக இது இல்லை. அதாவது, 60 வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் செலுத்த வேண்டிய வரி 12,500 தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்நிலையில், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், 5 சதவீத வரி விதிக்கப்படும் இந்த வருமான வரி வரம்பு 2.5 லட்சம் முதல் 7 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோல் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத வரி, 10 லட்சத்துக்கு மேல் 20 லட்சம் வரை ஈட்டுவோருக்கு 20 சதவீத வரி நிர்ணயிக்கலாம் என பரிந்துரைகள் வந்துள்ளன.  

மேலும், 20 லட்சம் முதல் 10 கோடி வரை வருவாய் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி, 10 கோடிக்கு மேல் இருந்தால் 35 சதவீத வரி நிர்ணயிக்கப்படலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த பரிந்துரை பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட்டால், உதாரணமாக, 10 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்கள் 60,000, 15 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 1.1 லட்சம் மற்றும் 20 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 1.6 லட்சம் வரி சேமிக்க முடியும். 4 சதவீத செஸ் வரி சேர்க்காமல் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என கணக்காயர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு வருமானம்    தற்போதைய வரி
2.5 லட்சம் வரை    வரி இல்லை
2.5 லட்சம் முதல் 5 லட்சம் 5 சதவீதம்
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 சதவீதம்
10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம்

பட்ஜெட் எதிர்பார்ப்பு
ஆண்டு வருமானம்    வரி
2.5 லட்சம் முதல் 7 லட்சம்    5 சதவீதம்
7 லட்சம் முதல் 10 லட்சம்    10 சதவீதம்
10 லட்சம் முதல் 20 லட்சம்    20 சதவீதம்
20 லட்சம் முதல் 10 கோடி    30 சதவீதம்
10 கோடிக்கு மேல்    35 சதவீதம்

Tags : change , Income tax, federal budget, income tax ceiling
× RELATED பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை...