ஜனநாயக கட்சி சரமாரி குற்றச்சாட்டு: டிரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானம் செனட் சபையில் காரசார விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்ய, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானம் கடந்த மாதம் 18ம் தேதி நிறைவேற்றப்பட்டது.   செனட் சபையிலும் இந்த தீர்மானம் நிறைவேறினால்தான் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்க முடியும். ஆனால், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளதால்,  அங்கு பதவி நீக்க தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை. இருந்தாலும், பதவிநீக்க தீர்மானம் செனட் சபைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 2 நாட்களாக விவாதம் நடக்கிறது. இதற்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமை தாங்குகிறார்.  முதலில் விதிமுறைகள் குறித்த விவாதம் நடந்தது. புதிய மற்றும் கூடுதல்  சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று  குடியரசுக் கட்சியின் செனட்   பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கனல் கூறினார். விதிமுறையில் எதிர்க்கட்சிகள்  கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டன.

 நவம்பரில் நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நோக்கத்தில், செனட்டில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய விவாதத்தில் இக்கட்சி உறுப்பினர் ஆடம்  சிப் பேசுகையில், ‘‘அமெரிக்க வரலாற்றிலேயே 3வது முறையாக டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மான நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு உதவியை அவர் நாடினார். இந்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணைக்கு தடையை ஏற்படுத்தினார்,’’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து செனட் சபையில் பதில் அளிக்க அதிபர் டிரம்ப்பின் வக்கீல்களான பேட் சிப்போலன், ஜே செக்லோ திட்டமிட்டுள்ளனர். இது குறித்து  சிப்போலன் கூறுகையில், ‘‘ஒரு தேர்தலை மட்டும் அல்ல, இரு தேர்தல்களை திருட எதிர்க்கட்சியினர் இங்கு முகாமிட்டு உள்ளனர். பதவிநீக்க தீர்மானம் என்ற சிறு காகிதங்களில் இந்த நோக்கம் புதைக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப், மீண்டும் தேர்தலை சந்திப்பதை தடுக்க அவர்கள் விரும்புகின்றனர்,’’ என்றார்.

Related Stories: