290 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லும் கஸ்னவி ஏவுகணை பாக். வெற்றிகர சோதனை: அணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் கொண்டது

இஸ்லாமாபாத்: அணு ஆயுதத்தை சுமந்து கொண்டு, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து  தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கஸ்னவி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான்  வெற்றிகரமாக நடத்தி உள்ளது.  ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை  மத்திய அரசு நீக்கியதால், இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. அந்த  சூழலில், அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று  தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கஸ்னவி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான்  கடந்தாண்டு ஆகஸ்ட் 29ம் தேதி  நடத்தியது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை  சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கண்டம்விட்டு  கண்டம் பாய்ந்து  தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கஸ்னவி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நேற்று  மீண்டும் நடத்தி உள்ளது.

இந்த சோதனை பற்றி பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தரையிலிருந்து  தரை இலக்குகளை தாக்கி அழிக்கவல்ல, 290 கி.மீ. வரை பாய்ந்து செல்லும் திறன்  கொண்ட கஸ்னவி ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.  இந்த சோதனை வெற்றிக்குக் காரணமாக இருந்த நிபுணர் குழுவினருக்கு நாட்டின்  மூன்று படைகளின் தளபதிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிபர்  ஆரிப் அல்வி, பிரதமர் இம்ரான் கான், முப்படைகளின் தலைமைத் தளபதி ஆகியோரும்  இந்த ஏவுகணைச் சோதனையில் பங்கேற்ற குழுவினருக்கு பாராட்டு  தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: