×

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவின் வுகான் நகரில் மக்கள் வெளியேற தடை

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வுகான் நகரில் பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் வசிக்கும் 1.1 கோடி மக்கள் வெளியேறவோ, வேறு நகரைச் சேர்ந்தவர்கள் வுகானுக்கு வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் புதுவகையான நோயை பரப்பும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. சார்ஸ் வகையை சேர்ந்த இந்த புதிய வைரஸ், சளி மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் ஆட்கொல்லியாகும். சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்துதான் இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது. தற்போது, ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி இருக்கிறது. தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங் மட்டுமின்றி அமெரிக்காவிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பீதி நிலவுகிறது.

சீனாவில் 600 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இறந்தவர்கள் அனைவருமே வுகான் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். வுகானில் தான் இந்த வைரஸ் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. இந்த நகரில் நேற்று மட்டும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள பிரபலமான ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்துதான்  கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இந்த சந்தையில் மீன்கள், இறால், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி முதலை, பாம்பு, வவ்வால், கரடி, ஒட்டகம், மயில் போன்ற விலங்குகளின் இறைச்சியும் விற்பனை செய்யப்படும்.
தற்போது இங்குள்ள நூற்றுக்கணக்கான இறைச்சி கடைகள் ஒட்டுமொத்தமாக பூட்டப்பட்டுள்ளன.

திறந்தவெளி மார்க்கெட் பகுதிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் எப்போதும் முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்திருக்க வேண்டுமென தேசிய சுகாதார ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது . மேலும், வுகான் நகரில் இருந்து வைரஸ் தொற்று வேறு நகரங்களுக்கு பரவுவதை தடுக்க அங்கு பஸ், ரயில் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  இந்நகரில் மொத்தம் 1.1 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக அடைக்கப்பட்டது போல் இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி வரை நகரில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது; வேறு நகரங்களில் இருந்து யாரும் வுகானுக்கு வரக்கூடாது என தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்நகரின் சுற்றுலா ஏஜென்சிகள், வேறு நகரங்களில் உள்ள அவற்றின் கிளைகள் வரும் 8ம் தேதி வரை வர்த்தகத்தை நிறுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வுகான் நகரமே தனித்தீவாகி இருக்கிறது. இதற்கிடையே, இன்று முதல் சீன புத்தாண்டு மற்றும் வசந்தகால திருவிழா விடுமுறை தொடங்க உள்ளது. வழக்கமாக இந்த விடுமுறையில் சீனர்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா செல்வது வழக்கம்.  அதே போல வெளிநாடுகளில் தங்கி இருக்கும் சீனர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று தொடங்கும் விடுமுறை காலமும் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவுதியில் கேரள நர்சுக்கு வைரஸ்:
சவுதி அரேபியாவில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் பணியாற்றும் மருத்துவமனையில் உள்ள 30 இந்திய நர்ஸ்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்க இந்திய தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாம்பிடம் இருந்து பரவியதா?
புதிய கொரோனா வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக சீனா ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிகவும் சிக்கலான இந்த வைரஸ் பாம்பிடமிருந்து மனிதர்களுக்கு பரவ அதிக வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். வுகானின் கடல் உணவு சந்தையில் பாம்பு கறி சாப்பிட்டவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் 2வது நாளாக ஆலோசனை:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் ஆலோசனையை தொடங்கியது. இந்த ஆலோசனை நேற்றும் தொடர்ந்தது. சீன புத்தாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்க இருப்பதால் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சீனா வைரஸ் பரவலை தடுக்க மிக மிக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறி உள்ளார்.

மேலும் 2 நகரங்களுக்கு சீல்:
சீனாவில் வுகானை தொடர்ந்து பக்கத்து நகரமான ஹுயாங்காங்கிலும் நேற்று நள்ளிரவு முதல் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு 75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள திரையரங்குகள், இன்டர்நெட் கபே மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோல, 11 லட்சம் மக்கள் வசிக்கும் இசோவ் நகரிலும் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Wukan ,China , Coronavirus, China, Wukan Nagar, people banned from leaving
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்