மத்திய அரசு புதிய கிடுக்கிப்பிடி தொழில் நிறுவனங்களுக்கும் வருகிறது பதிவேடு: பொருளாதார கணக்கெடுப்பில் விவரங்களை திரட்ட முடிவு

புதுடெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக தேசிய வர்த்தக பதிவேட்டை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 7வது பொருளாதார கணக்கெடுப்பு நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதில் கிடைத்த விவரங்களை திரட்டி வர்த்தக பதிவேட்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக இந்த சட்டம் உள்ளது என எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த பதற்றம் தணியாத நிலையில், அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி விட்டது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

 தற்போது 7வது பொருளாதார கணக்கெடுப்பு, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கணக்கீட்டாளர்கள், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று தகவல்களை திரட்டி வருகின்றனர். தொழில் செய்வோர் எத்தனை பேர், அது நிலையான தொழிலா அல்லது நிலையற்றதா, ஆண்டு வருவாய், தொழிலை எந்த துறையில் பதிவு செய்துள்ளனர், நிறுவனத்தில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர், ஏற்றுமதி, இறக்குமதி உட்பட பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில், தேசிய வர்த்தக பதிவேடு உருவாக்கப்பட உள்ளது. இதில், நிறுவனத்தின் பெயர், உரிமையாளர் பெயர், நிறுவனம் இருக்கும் ஊர்/இடம், எந்த வகையான வர்த்தகத்தில் ஈடுபடுகிறது, பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை பேர், பான் எண்/ டான் எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். மேலும், கம்பெனி விவகார அமைச்சகம், ஜிஎஸ்டி, பிஎப் உள்ளிட்ட துறைகளின் மூலமாக கிடைக்கப்பெறும் நிறுவனம், தொழில் விவரங்களையும் எடுத்து இந்த பதிவேடு உருவாக்கப்படும். ஜிஎஸ்டி விவரங்களை வைத்து துறை ரீதியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கணக்கிடலாம்.

ஜிஎஸ்டிஎன் விவரங்களின் அடிப்படையில், வரி வசூல் எளிதாக அமையும். பல வகையிலும் நிறுவனங்களின் விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்படுவதால், இவை நம்பத்தகுந்த ஆதாரத்துடன் கூடிய தகவல்களாக அமையும் என்றனர்.  தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்று நிறுவனங்கள் பற்றிய இந்த கணக்கெடுப்பு மத்திய அரசின் மிகப்பெரிய திட்டமாக கருதப்படுகிறது. ஜிஎஸ்டி விவரங்களை திரட்டி இந்த கணக்கெடுப்பில் பயன்படுத்தும் நோக்கில், ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் தொழில்துறையினர் விவரங்களை தருமாறு நிதியமைச்சகத்திடம் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கேட்டிருந்தது.  சில மாநிலங்கள் வர்த்தக பதிவேட்டை தங்களுக்கென உருவாக்கி வைத்துள்ளனர். எனவே, இந்த திட்டத்தில் மாநிலங்களின் உதவியை கோர மத்திய அரசுக்கு நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெகா சர்வே

* வர்த்தக பதிவேடு மிக பிரமாண்ட சர்வே மூலம் உருவாக்கப்பட இருக்கிறது. இதில் நிறுவனத்தின் பெயர், உரிமையாளர் பெயர், நிறுவனம் இருக்கும் இடம், வர்த்தக விவரம், ஊழியர்கள் எண்ணிக்கை, நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் பான் எண்/ டான் எண் திரட்டப்பட உள்ளது.

* கம்பெனி விவகார அமைச்சகம், ஜிஎஸ்டி, பிஎப் உள்ளிட்ட துறைகளின் மூலமாக கிடைக்கப்பெறும் நிறுவனம், தொழில் விவரங்களையும் எடுத்து பதிவேடு உருவாக்கப்படும்.

* இதன்மூலம் ஜிடிபி மதிப்பீடு, வரி வசூல் போன்றவையும் எளிதாகும் என கருதப்படுகிறது.

Related Stories: