ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் சிபிஐயை சேர்க்க கோரிய திமுக வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐயை சேர்க்கக்கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை  சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையம் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்திருந்தார்.இந்நிலையில்,  இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க கோரியும் வக்கீல் வைரக்கண்ணன் மற்றும்  திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளிக்க  தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய  தேர்தல் ஆணையம்  தெரிவித்திருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், அமைச்சர் விஜயபாஸ்கரின் 8 நிதி ஆண்டுகால வருமான வரி மதிப்பீட்டில் 4 ஆண்டு கால மதிப்பீடு முடிவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள 4 நிதி ஆண்டு கால மதிப்பீட்டை முடிக்க மேலும் ஒரு  ஆண்டு காலம் ஆகும் என்றும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், இந்த வழக்கில் சிபிஐயை இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்தார்.அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பணப்பட்டுவாடா புகார் குறித்து 828 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் பணப்பட்டுவாடா புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது. வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து  வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மேம்முறையீடு செய்யவில்லை என்று வாதிட்டார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் புதிய புகாரை அளிக்கவில்லை.இந்திய தேர்தல் ஆணையம்,  வருமான வரித்துறையை சார்ந்து இருப்பது தவறு. வருமான வரித்துறை அறிக்கைக்காக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தையும் மோசடி செய்யும் செயலாகும். இந்த வழக்கில் சிபிஐயை  இணைக்க வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆட்சேபணை தெரிவிக்காத நிலையில், அபிராமபுரம் காவல் ஆய்வாளர் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அவருக்கும் இந்த வழக்கில் சம்பந்தம் இருக்கலாம். அதிகாரிகளும், போலீசாரும் கூட்டு சேர்ந்து இந்த முறைகேட்டை மறைக்க பார்க்கிறார்கள். புகார் கொடுத்தவர்களிடம் எதுவும் கேட்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கில் சிபிஐயையும் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா முறைகேடு  குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். பிரதான   வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: