கல்லூரியில் எல்.எல்.பி. படித்ததாக சான்று கொடுத்து பல கோடி மோசடி ஆந்திர தனியார் சட்ட கல்லூரி முதல்வர் அதிரடி கைது

* தமிழகத்தில் 3 ஆண்டில் 1000 பேருக்கு சான்று

* 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு

சென்னை: பல கோடி பணம் பெற்று கொண்டு தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சட்டம் படித்ததாக சான்று கொடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை மோசடி செய்த ஆந்திராவில் உள்ள தனியார் சட்ட கல்லூரி முதல்வரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க (பார் கவுன்சில்) செயலாளர் ராஜாகுமார் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தெற்கு ரயில்வே துறையில் கார்டாக பணியாற்றி வந்த விபின் என்பவர் பணியில் இருக்கும் போது ஆந்திரா கடப்பாவில் உள்ள எஸ்பிடிஆர்எம் தனியார் சட்ட கல்லூரியில் எல்எல்பி சட்டப்படிப்பு படித்ததாக எங்கள் சங்கத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். அவர், கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை சட்ட கல்லூரியில் படித்தாக தெரிவித்துள்ளார். ஆனால் விபின் தெற்கு ரயில்வேயில் கடந்த மே 2017ம் ஆண்டு தான் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார்.   அப்படி இருக்க, சட்ட கல்லூரியில் 80 சதவீதம் நாட்கள் கல்லூரிக்கு வந்ததாகவும், தனியார் சட்ட கல்லூரி சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது. எனவே விபின் சட்டம் படிக்காமல் சட்டம் படித்ததாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய மனு செய்துள்ளார். எனவே இது போலியானது என உறுதி செய்து நாங்கள், விபின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தில் போலி ஆவணம் மூலம் வழக்கறிஞராக பதிவு செய்ய முயன்ற விபின் மற்றும் போலி சான்று வழங்கிய ஆந்திராவில் உள்ள தனியார் சட்ட கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின்படி, ெசன்னை உயர் நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தெற்கு ரயில்வேயில் கார்டாக பணியாற்றி வரும் விபின் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களாக உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோருக்கு பணம் கொடுத்து ஆந்திராவில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் எல்எல்பி படித்ததாக சான்று பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் முன்னாள் ரயில்வே ஊழியர் விபின் மற்றும் மோசடிக்கு உதவிய வழக்கறிஞர்கள் உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர். இதுபோல் பலர் பணம் கொடுத்து மோசடியாக சட்டம் படித்தாக சான்று பெற்றது தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் ஆந்திராவில் உள்ள எஸ்.பி.டி.ஆர்.எம். தனியார் சட்ட கல்லூரி முதல்வர் ஹிமவந்த் குமார்(54) என்பவருக்கு  எல்எல்பி படித்ததாக சான்று வழங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து சட்டத்திற்கு புறம்பாக சட்டம் முடித்ததற்கான சான்று வாங்கி வந்தது தெரியவந்தது.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மோசடிக்கான முக்கிய ஆவணங்கள் பல கிக்கியது. உடனே சட்ட கல்லூரி முதல்வரான கடப்பா ரவிந்தரா நகரை சேர்ந்த ஹிமவந்த் குமாரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பணத்திற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு 300 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் ஆயிரம் பேருக்கு எங்கள் கல்லூரியில் இருந்து சட்டம் படித்ததாக சான்று கொடுத்ததை ஒப்பு கொண்டார். அதன்படி சட்ட கல்லூரி முதல்வரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி வழக்கின் பின்னணியில் பல வழக்கறிஞர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர்கள் குறித்து முழு விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர சட்ட கல்லூரி முதல்வர் ஹிமவந்த்குமாரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: