நீட் தேர்வை தடுக்க முடியவில்லை : அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட கொடி கட்டிய காரில் வர முடியும், நாங்கள் எல்லாம் மிட்டா மிராசு கிடையாது. முதல்வர் சொன்னதின் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக அவரே உள்ளார். அதிமுகவில் கடைகோடி தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 17 சதவீதம் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலை. நீட் தேர்வினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தடுக்க நாங்களும் போராடுகிறோம், ஆனால் முடியவில்லை. இதனால் அடுத்த ஆண்டு முதல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோல, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: