பல நாடுகளில் இருந்து கடத்தி வந்த 1.14 கோடி தங்கம் பறிமுதல் : பெண் உள்பட 7 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடந்த  சோதனையில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள இரண்டே முக்கால் கிலோ தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டது. பெண் உள்பட 7 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மைதீன் (51), சென்னையை  சேர்ந்த ரகீமா பேகம் (39) ஆகிய 2 பேர் சுற்றுலா பயணியாக சென்று விட்டு வந்தனர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது ரகீமா பேகம் ஆடைக்குள் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மைதீன் உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை எடுத்தனர். 2 பேரிடம் இருந்தும் 770 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.31.81 லட்சம். இருவரையும் கைது செய்தனர். 

இதுபோல, நேற்று காலை 5 மணிக்கு தாய்லாந்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சிவகங்கையைச் சேர்ந்த முகமது கரீம் (58), ராமநாதபுரத்தை சேர்ந்த இப்ராகிம் (51), தஞ்சையை சேர்ந்த சாகுல் அமீது (31) ஆகிய 3 பேர் சுற்றுலா பயணியாக தாய்லாந்துக்கு சென்று விட்டு வந்தனர். 3 பேரின்  உள்ளாடை,  ஆசனவாய்க்குள் மறைத்து வைத்திருந்த ரூ.51 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்கத்தை கைப்பற்றி 3 பேரை கைது செய்தனர். நேற்று காலை 6.30 மணிக்கு மலேசியாவில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சென்னையை  சேர்ந்த ரிவாஸ்கான் (27), சாதிக் (42) ஆகிய 2 பேர் மலேசிய நாட்டிற்கு போய் விட்டு வந்தனர். இவர்களுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.31 லட்சம் மதிப்புடைய 748 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் ரூ.1.14 கோடி மதிப்புடைய இரண்டே முக்கால் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு பெண் உள்பட 7 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.   

Related Stories: