×

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்ட சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் 27ம் தேதி முதல் தொடர் போராட்டம்

* அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகளும் பங்கேற்பதால் மீண்டும் பரபரப்பு

திருச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் வரும் 27ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடக்கிறது. ஒரே நேரத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் இறங்க உள்ளதால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1ல் விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதன்பின், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதவிர, கடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்தனர்.இந்நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில், மொத்தம் 19,789 சதுர கி.மீ. பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உரிமங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் 4,064.22 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால்
வரையிலும், தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  இதற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவிக்கையில், ‘‘டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. அதை மத்திய அரசு மாற்றி ‘பி கிரேடு’ என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

அவ்வாறு கொண்டு வந்து அரசாணை வெளியிட்டுள்ளதால் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசு அரசாணை கொண்டு வந்தாலும், தமிழக சுற்றுச்சூழல் கமிட்டியில் அனுமதி வாங்க வேண்டும். எந்த ஒரு வகையிலும் மக்களை பாதிக்கும் திட்டமாக இருந்தால் அதற்கு 100 சதவீதம் அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதுபோன்ற திட்டங்களை தடுத்து நிறுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.
எனினும் விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படாததால் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு  மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ம் தேதி முதல் காவிரி  படுகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக மயிலாடுதுறை,  தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், புதுச்சேரி, காரைக்கால்,  கடலூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது என்பதால் அவர்களும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். 28ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நலஅமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இப்படி ஒரே நேரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதிப்பதால், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்ட அறிவிப்பை கண்டித்து, திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுர்ஜித், மாநில துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நேற்று கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Delta Delta , Hydro-carbon project, environmental clearance issue , Delta
× RELATED மக்களவை தேர்தலில் காலை 11 மணி...