ஓபிஎஸ், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ கண்டனம் செய்த நிலையில் ரஜினி பேசியது தவறில்லை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தடாலடி

விருதுநகர்: பெரியார் குறித்து ரஜினி பேசியதில் தவறில்லை என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை கலெக்டர் கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான, ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் தாங்களாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். ரஜினி அன்று பேரணியில் நடந்ததை கூறினார். திகவினர் ரஜினியை மிரட்டுகின்றனர். ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா திகவினர்? கொடும்பாவி எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல் வேலையா? ரஜினி நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை அப்பட்டமாக பேசக்கூடியவர்.

ராமபிரான் படத்தை நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா, இல்லையா? வேறு மதத்தை சேர்ந்த கடவுளை செய்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? ரஜினி பேசியதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். அந்த பேரணியில் பெரியாருக்கு தெரியாமல் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். யாரோ செய்துவிட்டனர். ஆனால் ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. பெரியாரை போன்றவர்கள்  இல்லையென்றால் என்னை போன்றவர்கள் அமைச்சராகி இருக்க முடியாது. அவரது பகுத்தறிவு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியது தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார். ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ரஜினிக்கு ஆதரவாக பேசியது, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலையை உயர்த்தியது ஏன்?

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ‘‘தீவனங்களின் விலை உயர்வால் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். அதற்காகதான் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தினோம். அதன் அடிப்படையில் தனியார் பால் விலையும் உயர்ந்துள்ளது. மக்களுக்கு அதனால் பிரச்னை ஏதுமில்லை’’ என்றார்.

Related Stories: