×

மாநகராட்சி, நகராட்சி தேர்தல் எப்போது? ஆணையத்துக்கு 3 வாரம் அவகாசம் : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாநகராட்சி, நகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் மூன்று வாரம் அவகாசம் வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: உள்ளாட்சிப்பதவிகள் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை.  தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதற்கான நோக்கமாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், டிசம்பர் 9ல் ஊரக  பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊரக  உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்துள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்.  எனவே, 15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த ஐகோர்ட் கிளை மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும்  நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்துவது குறித்து பதிலளிக்க 4 வாரம் அவகாசம் கோரினார். இதற்கு மனுதாரர் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 4 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு மேலும் 3 வாரம் அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags : elections ,Commission , municipal ,municipal elections, 3 weeks' time ,Commission, ICT Branch Directive
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...