பிப்ரவரி மாதம் வெளியாகிறது காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியல் : டெல்லி தலைமை சம்மதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்ற பின்பு இன்னும் நிர்வாகிகள் யாரைம் மாற்றவில்லை. ஆனால் அவருக்கு சில மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததை தொடர்ந்து வேறு வழியில்லாமல் தனது ஆதரவாளர்களையும் பதவியில் கொண்டு வரும் முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, தனது ஆதரவாளர்கள் இடம்பெற்ற பட்டியல் ஒன்றை தயார் செய்து டெல்லி தலைமையிடம் ஒப்படைத்தார். அந்த பட்டியலில், 12 மாவட்ட தலைவர்கள் மாற்றவும், புதிய மாநில நிர்வாகிகள் பலரும் இடம்பெற்றிருந்தனர்.

இதனால் அந்த பட்டியலுக்கு கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பட்டியலில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக கட்சி தலைமைக்கு கோஷ்டி தலைவர்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. தங்களுக்கு உரிய ஒதுக்கீடு அளிக்காமல் கே.எஸ்.அழகிரி அளித்த பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று கட்சியின் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் முறையிட்டனர்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மீண்டும் பட்டியல் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை, கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.

அப்போது புதிய நிர்வாகிகளை நியமித்தால் தான் கட்சி பணிகளை விரைவுபடுத்த முடியும் என்று முறையிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கே.எஸ்.அழகிரி வழங்கிய பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு, கோஷ்டி தலைவர்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி புதிய பட்டியலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 12 மாவட்ட தலைவர்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து தலைவர்களையும் திருப்திபடுத்தும் வகையில் மாநில நிர்வாகிகள் பட்டியலில் பலர் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக காங்கிரசுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: