இந்துக்களின் அடையாளம் ராமர் பாலம்: தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு...மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13  மணல் தீடைகள் உள்ளன. இது ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பாலம் வெறும் கற்பனைதான் என்ற வாதமும் இருந்து வருகிறது.  இந்நிலையில், ராமர் பாலம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வு ஒன்றை நடத்தினர்.

அதில் ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. மேலும் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதும் கூட ராமர் பாலம் எந்த சேதமும் அடையவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. கடந்த  2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்று 700 ஆண்டுகளுக்கு முன்பும் சுனாமி ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்கள் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இந்தியா-இலங்கை நடுவேயான ராமர் பாலம் மனிதர்களால்தான்  கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ராமர் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளதால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு வராமல்  நிலுவையில் இருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்  உச்சநீதிமன்றத்தை அணுகுமாறும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: